பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 15 வகையான கட்டண உயர்வுகளைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் புதன்கிழமையன்று புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
திருச்சியில் இயங்கிவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடப்பு கல்வியாண்டிலிருந்து விண்ணப்பக் கட்டணம், தேர்வுக்கட்டணம், செய்முறை தேர்வுக்கட்டணம், மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணம், பட்டய சான்றுக்கான கட்டணம் உள்ளிட்ட 15 வகையான உயர்வை அறிவித்துள்ளது. இது ஏழை, ஏழைய மாணவர்களை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கும்.எனவே, அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வுகளை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி மாணவர்களிடம் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறது. அதனொரு பகுதியாக புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கையெழுத்து இயக்கத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் அகத்தியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.விக்கி, துணைச் செயலாளர்கள் எஸ்.ஜனார்த்தனன், கார்த்திகாதேவி, மாவட்டக்குழு உறுப்பினர் பசுபதி, ஜெனித்குமார், சந்தோஷ், கார்த்திக்கேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கையெழுத்து இயக்கத்தில் 500-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து இன்று புதுக்கோட்டை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இந்தக் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது.