நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் - நியூட்ரினோ - மீத்தேன் - ஹைட்ரோகார்பன் - பெட்ரோலிய மண்டலம் - சாகர்மாலா திட்டங்களைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் மக்கள் திரள் போராட்டம் நடைபெற்றது.
தமிழர் உரிமைக்கான மாணவர் இளைஞர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் திரைப்பட இயக்குனர் வ.கவுதமன் தலைமை தாங்கினார். தமிழர் கலை பண்பாட்டு பேரவை தலைவர் இயக்குனர் பாரதிராஜா, தமிழ்த்தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சி.மகேந்திரன், நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ, மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் த.செயராமன், சமூகநீதிக்கான மருத்துவர்கள் சங்க தலைவர் ரவீந்திரநாத், கடலூர் மாவட்ட உழவர் மன்றங்களின் தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன், திரைப்பட இயக்குனர்கள் வீ.சேகர், வேலுபிரபாகரன், வெற்றிமாறன், பேரரசு, சுரேஷ் காமாட்சி, சேலம் தமிழ்ச்செல்வன் மற்றும் பல்வேறு கட்சிகள், இயக்கத்தினர், தமிழ் உணர்வாளர்கள் ஏராளமானோர் பேசினர்.
போராட்டத்தில் இயக்குனர் பாரதிராஜா பேசும்போது, "காவிரி பிரச்சனையில் இன்று 3-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நியாயமான தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கடும் வெயிலில் பயிர்கள் கருகி காவிரி டெல்டா மாவட்டமே எரியும் நிலையில் கர்நாடக தேர்தலை காட்டி தீர்ப்பை தள்ளி வைக்கிறது நீதிமன்றம். தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது மத்திய அரசு.
இப்படி தொடர்ந்து அநீதி இழைப்பதால் 50 ஆண்டுகளுக்கு முந்தி எழுப்பப்பட்டு, காலப்போக்கில் நீர்த்து போன தனிநாடு கோரிக்கையை மீண்டும் இளைஞர்கள் எழுப்பும் நிலை இன்றைக்கு எழுந்துள்ளது.
தமிழ் மொழியை, தமிழ் நிலத்தை, தமிழ்நாட்டின் கனிம வளங்களை அழிக்கின்ற வேலையை இந்திய அரசு செய்கிறது. இங்கு யார் வேண்டுமானாலும் வரட்டும், தொழில் செய்யட்டும், அரசியல் செய்யட்டும் ஆனால் தமிழன் மட்டுமே இனிமேல் எங்களை ஆள முடியும். இனியும் மற்றவர்கள் எங்களை ஆள்வதை அனுமதிக்க முடியாது" இவ்வாறு அவர் பேசினார்.