Skip to main content

1627 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற 'ஆனந்த தாண்டவம்'; புதுவையில் உலக சாதனைக்கான நிகழ்ச்சி!

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

 Bharatanatyam artists participated world record event in puducherry

 

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு புதுச்சேரியில் 1627 பரதநாட்டிய நடனக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் உடுக்கை ஓசையுடன் சிவபெருமானின் 'ஆனந்த தாண்டவம்' ஆடி உலக சாதனை படைத்தனர்.

 

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் காந்தி மண்டபம் முன்பாக 1627 நடனக் கலைஞர்கள் உடுக்கை ஓசையுடன் ஆனந்த தாண்டவ நடனமாடும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி சுற்றுலாத் துறையும் சங்கமம் குளோபல் அகாடமியும் இணைந்து இந்த சாதனை நிகழ்ச்சி நடத்தினர்.

 

இந்த சாதனை நிகழ்ச்சியில் இந்தியாவின் புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்களும், சிங்கப்பூர், ஜெர்மனி, இலங்கை, மலேசியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து நடனக் கலைஞர்களும் கலந்துகொண்டு உடுக்கை ஓசையுடன் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை 8 நிமிடம் 11 வினாடிகளில் நடனமாடி உலக சாதனை படைத்தனர்.

 

இந்த உலக சாதனை நிகழ்ச்சியை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்ததுடன், சாதனைக்கான பரதநாட்டியத்தில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், “சித்தர்கள் வாழ்ந்த இந்த பூமியில் சித்ரா பௌர்ணமி அன்று சிவதாண்டவம் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

 

கடற்கரை சாலையில் விண்ணை எட்டிய உடுக்கை ஓசையுடன், பரதநாட்டிய கலைஞர்கள் நடனமாடி சாதனை படைத்த இந்த நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கை தட்டி உற்சாகப்படுத்தி கண்டு களித்தனர். தாய் தமிழ் மண்ணில் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை, உடுக்கையுடன் ஆடியது மகிழ்ச்சியை தருவதாக மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்து கலந்து கொண்ட நடன கலைஞர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமி நாராயணன், சுற்றுலாத்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கலியபெருமாள், இந்திராகாந்தி தேசிய கலை மைய மண்டல இயக்குனர் கோபால், புதுச்சேரி தமிழ் சங்கத் தலைவர் முத்து மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நுண்கலை பேராசிரியர்கள், ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த சாதனை நிகழ்ச்சியை டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் 'யுனிக் வேர்ல்ட் ரெக்கார்ட்' அமைப்பு பதிவு செய்துள்ளது என்றும்,  அடுத்து இந்த சாதனை 'லிம்கா' புத்தகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

 

 

சார்ந்த செய்திகள்