நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், அரசு முதன்மை செயலாளருமான சத்யபிரதா சாகு மக்களவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “திறன் மிக்க வாக்காளராகுங்கள்” என்ற வாக்காளர் கையேட்டினை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (25.03.2024) வெளியிட்டார்.
இந்த கையேட்டில், “மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம் நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும் மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றி மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்த ஒரு தூண்டுதலும் இன்றி வாக்களிப்போம் என்று உறுதிமொழிகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.