கரையைக் கடந்த மாண்டஸ் புயலால் சென்னை காசிமேட்டில் 150 படகுகள் சேதமடைந்துள்ளது. 20 படகுகள் கடலில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படகுகள் சேதமடைந்ததால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் கோவளம் கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல படகுகள் சேதம் அடைந்துள்ளதால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், காசிமேட்டில் சேதமடைந்த படகுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர், ''நேற்றைய தினம் நான் தென்காசி, மதுரை போன்ற மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு சென்னைக்கு திரும்பினேன். திரும்பியவுடன் இரவோடு இரவாக கண்ட்ரோல் ரூமிற்கு நேரடியாகச் சென்று என்ன நிலைமை என்பதை ஆய்வு செய்தேன். புயல் எந்த மாவட்டத்திற்கு வரும், மழை எங்கே அதிகம் பெய்யும் என்பதை அறிந்து அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் காணொளி காட்சி மூலமாக நேரடியாக பேசி விவரங்களை தெரிந்து கொண்டேன்.
அதற்குப் பிறகு விடிய விடிய ஒவ்வொரு ஆட்சித் தலைவரிடத்திலும் என்ன நிலைமை; எப்படி இருக்கிறது; புயல் கடந்து விட்டதா; அதிலும் குறிப்பாக மகாபலிபுரத்தில் அந்த புயல் கடக்கிறது என்ற செய்தி வந்தது. அந்த ஆட்சித் தலைவரிடம் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை நான் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறேன். அதற்குப் பிறகு இன்று காலை தென்சென்னை பகுதியில் கொட்டிவாக்கம் பகுதியிலும் ஈஞ்சம்பாக்கம் பகுதியிலும் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய மீனவர்கள் பகுதிக்கு சென்று அந்த மக்களையும் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு அவர்களுக்கான நிவாரண உதவிகளைச் செய்துவிட்டு இப்பொழுது வடசென்னை பகுதி இருக்கக்கூடிய காசிமேடு பகுதிக்கு வந்திருக்கிறேன்.
மிகப்பெரிய மாண்டஸ் புயல் தாக்குதலில் இருந்து தமிழகம் குறிப்பாக சென்னை முழுமையாக மீண்டிருக்கிறது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு எடுத்திருக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாகவும், அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு செயல்பாடு காரணமாகவும் மக்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். பெரிய அளவில் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எந்த சேதங்களும் இல்லை. மரங்கள் விழுந்திருப்பதைக் கூட உடனடியாக போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் சிறப்பான முறையில் செய்துள்ளார்கள்.
இரவென்றும் பாராமல் பகலென்றும் பாராமல் நம்முடைய அமைச்சர் பெருமக்கள் குறிப்பாக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் போன்ற பல்வேறு அமைச்சர்கள் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், மின்சார வாரியத்தின் ஊழியர்கள், காவல்துறையைச் சேர்ந்தவர்கள், தீயணைப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள், குறிப்பாக தூய்மை பணியாளர்கள் அவர்களெல்லாம் முழுமையாக தங்களை இதில் ஈடுபடுத்திக் கொண்டு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தது பாராட்டிற்குரியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வாங்கப்படும்'' என்றார்.
முன்னதாக சென்னை ஈஞ்சம்பாக்கம், பாலவாக்கம், கொட்டிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.