தன்னை அடித்த போலீஸை திருப்பி அடித்து கைதட்டல் வாங்குவதெல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும். நிஜத்தில் அப்படி நடந்துகொண்டால் கம்பி எண்ண வேண்டியதுதான். சாத்தூரைச் சேர்ந்த பத்மநாபனும் கண்ணனும் அப்படி ஒரு வழக்கில்தான் கைதாகியிருக்கின்றனர். சரி, விவகாரத்துக்கு வருவோம்!
அன்றைக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக போக்குவரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள் சாத்தூர் போலீசார். பத்மநாபனின் கடைக்கு முன்னால் அவருக்குச் சொந்தமான ஆட்டோ நின்றது. நோ பார்க்கிங் இடத்தில் ஆட்டோ நிற்பதாகச் சொன்னது போலீஸ். ‘என்னுடைய இடத்தில்தானே ஆட்டோ நிற்கிறது. அதெல்லாம் எடுக்க முடியாது.’ என்று மறுத்துப் பேசினார் பத்மநாபன்.
‘பப்ளிக்’ எதிர்த்துப் பேசினால் விரைப்பான போலீசார் சும்மாவா இருப்பார்கள்? கடைக்குள் புகுந்து பத்மநாபனைப் பின்னி எடுத்துவிட்டார்கள். அதனைத் தொடர்ந்து, ‘வழக்கு போடுறதுன்னா போட்டுக்க வேண்டியதுதானே? மரத்தடியில்தானே ஆட்டோ நிற்குது. என்னை எதுக்கு அடிக்கணும்? ஆர்.சி.புக்கெல்லாம் தர முடியாது. கையை வெட்டிருவேன். எவனா இருந்தாலும் சரி. மொதல்ல என்னை அடிச்சதுக்குப் பதில் சொல்லுங்க.’ என்று வீராவேசமாக நியாயம் கேட்டிருக்கிறார் பத்மநாபன். அப்போது, டிரைவரான உறவினர் கண்ணனும் பத்மநாபனுக்கு உதவும் விதத்தில் அங்கு நின்றிருக்கிறார். பொது இடத்தில் போலீசுக்கும் பத்மநாபனுக்கும் காரசாரமாக நடந்த இந்த வாய்ச்சண்டையை பலரும் வேடிக்கை பார்த்தனர். சிலர் செல்போன் கேமராவில் வீடியோவும் எடுத்தனர். ஒருகட்டத்தில் தாக்குதலும் நடந்தது.
போக்குவரத்து சார்பு ஆய்வாளர் சுந்தர்ராஜ் நம்மிடம் “வாக்குவாதம் செய்தபோது போதையில் இருந்தார் பத்மநாபன். என் முகத்தில் குத்தினார். தடுமாறி கீழே விழுந்துவிட்டேன். அதற்கு முன் பத்மநாபனின் கடைக்குள் நான் போகவில்லை. அவரை அடிக்கவுமில்லை. சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறேன்.“ என்றார். சார்பு ஆய்வாளர் சுந்தர்ராஜ் தாக்கப்பட்டதாக சாத்தூர் டவுண் காவல் நிலையத்தில் புகார் ஆகிவிட, பத்மநாபனும் கண்ணனும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்றனர்.
யாரை வேண்டுமானாலும் காவல்துறையினர் அடிப்பார்கள். ஆனால், ஆத்திரத்தில் யாராவது காவல்துறையினர் மீது கைவைத்தால் விடவே மாட்டார்கள். இது, எந்தச் சட்டத்திலும் இல்லாத பொதுவான விதியாகிவிட்டது. நியாயமா நியாயமாரே?