நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி நகரின் மெயின் சாலையில் தாலுகா அலுவலகம் அருகே கிருஷ்ணா கம்ப்யூட்டர்ஸ் மற்றும் ஜெராக்ஸ் கடை வைத்திருப்பவர் வானமாமலை. இவர், அரசியல் கட்சியின் சேனல் ஒன்றின் நாங்குநேரிப் பகுதி நிருபராகவும் பணிபுரிந்து வருபவர்.
இன்று காலை (நவ-21) 9 மணியளவில் வழக்கம் போல் கடையைத் திறந்திருக்கிறார். அதுசமயம் திடீரென பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் தன் கைப்பையில் மறைத்து வைத்திருந்த உருண்டை போன்ற ஒரு பொருளை வீசியிருக்கிறார். கடையினுள்ளே விழுந்த அந்தப் பொருள் வெடிக்கவில்லை. தொடர்ந்து அடுத்ததாக ஒன்றை வீச அது கடைமுகப்பின் முன்னே உள்ளே போர்டில் தெரித்து டமார் என வெடித்திருக்கிறது. சப்தம் கேட்ட நிருபர் வானமாமலை பதற்றத்தில் வெளியே வர, வீசிய வாலிபர் தன்கையிலிருந்த கைப்பையை வீசிவிட்டுத் தப்பியிருக்கிறார். அதை நிருபர் வானமாமலை பார்த்த போதுதான் உள்ளேயிருப்பது வெடிக்காத குண்டு, கடையில் வீசியது வெடிகுண்டு என்பதும் தெரிய வந்திருக்கிறது.
நிருபர் கடையில் வீசப்பட்ட வெடிகுண்டு சப்தம் அக்கம் பக்கம் பதற்றத்தை ஏற்படுத்த, வானமாமலையின் தகவலால் ஸ்பாட்டுக்கு வந்த நாங்குநேரி இன்ஸ்பெக்டர் ஆதம் அலியின் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தவர்கள். வெடிக்காத குண்டை கண்காணிப்பிற்குள் கொண்டு வந்துவிட்டு ஆய்வு செய்வதற்காக வெடிகுண்டு தடுப்பு பிரிவிற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட்டின் போது நாங்குநேரியின் பள்ளி மாணவனை வீடு புகுந்து சகமாணவர்கள் வெட்டிய விவகாரம் அதிர்வையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அதுசமயம் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளூர் நடப்புகளை செய்தியாக வெளியிட்டிருக்கிறார் நிருபர் வானமாமலை. அது தொடர்பான மோட்டிவ் தான் அவரைக் குறிவைத்து வீசப்பட்ட வெடிகுண்டு வீச்சு சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என்ற தகவலும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
பதற்றத்திலிருந்த நிருபர் வானமாமலையைத் தொடர்புகொண்டு பேசும் போது, வழக்கமாக நான் காலை 9 மணிக்கு சற்று முன்பாக கடையைத் திறந்த சில நிமிடங்களில் பைக்கில் வந்தவன் ஒரு குண்டை கடைக்குள் வீசிய போது அது வெடிக்கவில்லை. என்னைக் குறிவைத்துத்தான் வீசியிருக்கிறான். நான் விலகிவிட்டதால் கடைக்குள் உள்ள பொருள் மீது பட்டு தெரித்திருக்கிறது. அடுத்தசில நொடிகளில் நான் எதிர்பாராத நேரத்தில் தொடர்ந்து அடுத்த குண்டை வீசினான், அது கடையின் போர்டில் பட்டு பலத்த சப்தத்துடன் வெடித்து சேதத்தை ஏற்படுத்தியது. பீதியில் நான் சுதாரித்து வெளியே ஓடிவந்த போது என்னைப் பார்த்தவன் பையைப் போட்டு விட்டு தப்பிவிட்டான். அவனை எனக்கு நன்றாக அடையாளம் தெரியும். பள்ளி ஒன்றில் படிப்பவன் என்றவர், பள்ளி மாணவன் அவனது சகோதரி வெட்டப்பட்ட போது நான் நிகழ்வுகளை செய்தியாக வெளியிட்டதால், அப்போதே அந்தக் கும்பல் என்னை மிரட்டியது. அதுகுறித்து நான் போலீசில் புகாரும் செய்துள்ளேன். புகைந்து கொண்டிருக்கும் அந்தப் பகைமை தான் வெடிகுண்டு வீச்சுக்குக் காரணம். என்கிறார் வானமாமலை.
இதுகுறித்து நாம் இன்ஸ்பெக்டர் ஆதம் அலியைத் தொடர்புகொண்டு பேசிய போது வெடிகுண்டு வீச்சு தொடர்பாக 12ம் வகுப்பு மாணவன் ஒருவனை பிடித்து விசாரணை செய்து வருகிறோம். பிறகே காரணம் தெரியவரும் என்கிறார்.