கோவை அருகேயுள்ள மலுமிச்சம்பட்டியில் பார் வசதியுடன் கூடிய டாஸ்மாக் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் (27.02.2021) இரவு அந்த டாஸ்மாக் பாருக்கு வந்த சிலர், பார் ஊழியர்களிடம் மதுபானம் கேட்டுள்ளனர். அதற்கு ஊழியர்கள், பணம் கொடுங்கள் தருகிறோம் என்று கூறி இருக்கின்றனர்.
அதற்கு அவர்கள், ‘நாங்கள் யாருன்னு தெரியுமா? எங்ககிட்டயே பணம் கேக்குரியா? எங்களைப் பகைச்சுட்டு பார் நடத்திருவியா?’ என்று தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டே அவர்கள் அனைவரும் சேர்ந்து பார் ஊழியர்களைக் கட்டையாலும் பாட்டிலாலும் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், அங்கிருந்த டேபிள், சேர்களை அடித்து நொறுக்கி சூறையாடியதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த பார் ஊழியர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து விசாரித்ததில், ஓசியில் மதுபானம் கேட்டு பார் ஊழியர்களைத் தாக்கியது கோவை புறநகர் மலுமிச்சம்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. ஐ.டி-விங் துணைச் செயலாளர் சம்பத்குமார் மற்றும் அவரது நண்பர்கள் என்று கூறப்படுகிறது.
மலுமிச்சம்பட்டி டாஸ்மாக் பாரில் ஒசி சரக்கு கேட்டு பார் ஊழியர்களைத் தாக்கியதில் படுகாயமடைந்த மூன்று பேர், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு பாட்டில் பிராந்திக்காக அதிமுக ஐடி.விங் நிர்வாகி டாஸ்மாக் பார் ஊழியர்களைத் தாக்கியது கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பார் ஊழியர்களைத் தாக்கும் காட்சிகள் அங்குள்ள சி.டி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.