கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில், அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்து தொடர்பான விசாரணையில் அது குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து என்.ஐ.ஏ விசாரணையைக் கையில் எடுத்துள்ள நிலையில், பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய இருவர் கர்நாடக மாநிலம் ஷிமோகாவை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்ததாகவும், சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் பொருட்களை வாங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர்கள் பயன்படுத்திய தொப்பி சென்னை சென்ட்ரலில் வாங்கியுள்ளதும் உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஷிமோகா ஐ.எஸ். மாடல் வழக்கில் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாகத் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், மண்ணடி மூட்டைக்காரன் தெருவில் அப்துல்லா என்பவர் வீட்டில் தேசியப் புலனாய்வு முகமை தற்போது சோதனை நடத்தி வருகிறது. பெங்களூர் வழக்கில் தொடர்புடைய இருவர் சென்னையில் தங்கியிருந்ததாக முன்பு தகவல்கள் வெளிவந்த நிலையில், மண்ணடி உள்ளிட்ட ஐந்து இடங்களில் என்.ஐ.ஏ சோதனை தற்பொழுது நடைபெற்று வருகிறது.