கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கபே என்ற பிரபல உணவகத்தில் நேற்று பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் மர்மப் பொருள் வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10 பேர் படுகாயமடைந்தனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறுகையில், “ஓட்டலில் வெடித்தது வெடிகுண்டு தான். இது மிக வீரியம் கொண்ட ஐ.ஈ.டி. வெடிகுண்டு என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஓட்டலில் யாரோ ஒருவர் பையை வைத்துவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்''என்றார்.
இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த காட்சிகள் அடிப்படையில் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நபர் எந்த பகுதிகளுக்கு சென்றாரோ அந்தந்த பகுதிகளில் உள்ள இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவாலயங்கள், ஆலயங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகப் பட்டியலில் உள்ள நபர்களின் நடமாட்டங்களை கண்காணிக்கவும் காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெங்களூரு மற்றும் ஆந்திர மாநிலத்தின் தமிழக எல்லைகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.