Skip to main content

தொடர் முகூர்த்த நாட்கள்; உச்சத்தில் வாழை இலை விலை

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

banana leaf price hike in erode voc market 

 

ஈரோடு மாவட்டம் வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் 700க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு காஞ்சி கோயில், பெருந்துறை, சோலார், கவுண்டபாடி, பாசூர், கருமாண்டம்பாளையம் போன்ற பகுதியில் இருந்து வாழை இலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இப்போது ஈரோடு சின்ன மார்க்கெட்டிற்கும் வாழை இலை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த 2 மார்க்கெட்டில் இருந்து மாநகர் பகுதியில் உள்ள கடைகளுக்கு வாழை இலைகள் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஓட்டல்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

 

இந்நிலையில் நேற்று திடீரென வாழை இலைகளின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு பெரிய கட்டு இலை (130 வரை எண்ணிக்கை) 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் நேற்று திடீரென இரண்டு மடங்கு விலை உயர்ந்து ஒரு கட்டு வாழை இலை ரூ.1000க்கு விற்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து திருமண நிகழ்வுகள், சுப முகூர்த்தங்கள் வருவதே ஆகும். மேலும் முக்கியமான காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் சாய்ந்ததால் வாழை இலை வரத்து குறைந்துள்ளது. இதுவும் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

 

மேலும்1 ரூபாய்க்கும் குறைவாக விற்ற டிபன் இலை 4 ரூபாய்க்கும், 4 ரூபாய்க்கு விற்ற தலைவாழை இலை 6 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. டிபன் மற்றும் சாப்பாட்டு இலை விலை உயர்ந்துள்ளதால் மக்கள் மட்டுமின்றி ஓட்டல் கடைக்காரர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநகரில் ஒரு சில கடைகளில் மாற்று இலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் விலை குறைந்துவிடும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்