
இயக்குநர் கவுதமன் மீது மூன்று வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவில் கலந்து கொள்ள தடையில்லா சான்று வழங்க முடியாது என சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவில் பிப்ரவரி 23-24ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள திருவிழாவுக்கு செல்ல இயக்குனர் கவுதமனுக்கு விழா குழு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் கச்சத்தீவு செல்ல தடையில்லா சான்று வழங்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்திருந்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதித்து வருவதால், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் கவுதமன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, கவுதமன் மீது ஏற்கனவே மூன்று குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தடையில்லா சான்று வழங்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தமிழர்களின் உரிமைகளுக்காக போராட்டங்களில் தான் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கவுதமன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி குறுக்கிட்டு, இதேபோல கச்சத்தீவில் எவ்வித பிரச்சினையும் ஏற்படக்கூடாது என காவல்துறை நினைத்திருக்கலாம் என தெரிவித்து, வழக்கை ஏப்ரல் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளார்.