பக்ரீத் பண்டிகை நாளை (17.06.2024) கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில், “பக்ரீத் பண்டிகை என்பது உலகெங்கிலும் உள்ள இசுலாமிய மக்களால் தியாகத்தின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தியாகம், இரக்கம் நன்றியுணர்வு போன்ற மனித மாண்புகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் இது போன்ற பண்டிகைகள் சமூகங்களுக்கு இடையேயான பிணைப்புகளை வலுப்படுத்தி, நல்லிணக்க உணர்வை வளர்க்க உதவுகின்றன. பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இந்தப் புனிதமான நாளில் அல்லாஹ்வின் ஆசீர்வாதமும் கருணையும் அனைவரது குடும்பத்திலும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும் என்று கூறி. அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “உலகத்தில் உள்ள அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், அன்பு ஆகியவற்றைப் பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதே மனித இனத்தின் குறிக்கோளாகும். இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாக கொண்டாடுகிற பக்ரீத் பண்டிகை தியாகத்தை போற்றுகிற நாளாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் சிறுபான்மையின மக்களுக்கு வழங்கியிருக்கிற உரிமைகளை பறிக்கிற வகையில் 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சி செயல்பட்டு வந்தது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றாலும், ஆட்சியமைக்க நரேந்திர மோடிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் பாதுகாவலனாக காங்கிரஸ் பேரியக்கமும், தலைவர் ராகுல்காந்தி அவர்களும் செயல்பட்டு வருகிறார்கள். இதன்மூலம் இஸ்லாமிய சமுதாயத்தினரின் உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தியாகப் பெருவாழ்வு கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டு வருகிற இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமமுக பொதுச் செயலளார் டிடிவி தினகரன் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளை பக்ரீத் பண்டிகையாக உலகெங்கும் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனுக்கு இணை ஏதுமில்லை எனக்கூறி இறைவனின் விருப்பத்தையே தன் விருப்பமாக கொண்டு வாழ்ந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் தன்னலமற்ற தியாக வாழ்க்கையின் மேன்மையைப் போற்றுவதே இந்த பக்ரீத் திருநாளின் நோக்கமாகும்.
இறைவனின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த இறைதூதரின் புனிதத்தையும், அரும்பெரும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் இந்நாளில் சாதி, மத மற்றும் இன வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ நாம் அனைவரும் உறுதியேற்போம். இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய நாளில் உலகெங்கும் அன்பு, அமைதி, சமாதானம், மனிதநேயம் மற்றும் மத நல்லிணக்கம் மலரட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.