Skip to main content

பக்ரீத் பண்டிகை; முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

Published on 29/06/2023 | Edited on 29/06/2023

 

bakrid festival cm mk stalin wishes

 

பக்ரீத் பண்டிகை இஸ்லாமிய மக்களால் இன்று காலை முதல் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை உடுத்தி பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டு பக்ரீத் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

 

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பக்ரீத் பெருநாள் வாழ்த்துச் செய்தியில், “சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்பு நெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள். ஏழை - எளியோரின் பசி தீர்த்துக் கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது. இந்நாளில், "ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகள்; பிறகு நண்பர்கள்; அடுத்துதான் தங்களுக்கு” என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து, பயன்படுத்திக் கொள்ளும் பண்பையும், மனித நேயத்தையும் இசுலாமியப் பெருமக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

 

இத்தகைய உயரிய நெறியினைக் கடைப்பிடித்து வரும் இசுலாமிய சமூகத்தினர் அனைவரும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி அன்பைப் பரிமாறிக் கொள்ளவும், நபிகளார் காட்டிய வழியில் அனைவரிடத்தில் அன்பு செலுத்திக் கருணை காட்டிடவும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

பக்ரீத் பண்டிகையை மக்கள் எவ்வித சிரமும் இன்றி கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் சொந்த ஊருக்குச் சென்று திரும்பும் வகையில் பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்