அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த அமர்வு நீதிமன்றம் வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஏற்கனவே பலமுறை செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றங்களை மாறி மாறி நாடியும், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்ற குழப்பம் நீடித்தது.
அதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவில் செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். அதே சமயம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 8வது முறையாக நீட்டித்து வருகிற 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் இருக்க உத்தரவிடப்பட்டது.
தொடர்ந்து மீண்டும் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு கடந்த 16 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாதிட்டார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அறிக்கை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வாதிட்டார். அப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் 45வது பிரிவு பொருந்தாது எனத் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பளிக்க இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவின் மீது நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளார். ஏற்கனவே பலமுறை செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த முறை ஜாமீன் கிடைக்குமா என எதிர்பார்ப்பில் இருக்கிறது செந்தில்பாலாஜி தரப்பு.