ஆருத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையில் 3.41 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
'ஆருத்ரா கோல்டு கம்பெனி' என்ற நிறுவனம் தங்கம் ஏற்றுமதி இறக்குமதி உள்ளிட்ட தொழிலை செய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள செய்யூர் என்ற இடத்தில் இந்த நிறுவனத்தின் தலைமை நிறுவனம் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இதன் கிளைகள் உள்ளது. இந்த நிறுவனத்தின் பெயரில் போலியாக விளம்பரம் ஒன்று வந்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட காலக்கெடு விதித்து அதற்குள் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் மாதம் 30,000 ரூபாய் வட்டி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பத்து மாதத்திற்கு இதுபோல் வட்டி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கவர்ச்சியான விளம்பரம் குறித்து பொருளாதார குற்றத்தடுப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து ஆருத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தின் 26 இடங்களில் தமிழகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சோதனையில் 3.41 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 11 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. சோதனையில் 48 கணினிகள், 6 லேப்டாப்கள், 44 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆருத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தின் இயக்குநர்கள் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.