Skip to main content

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை விற்பனை செய்யத் தடை!

Published on 28/06/2021 | Edited on 28/06/2021

 

 

copper plant waste highcourt madurai bench

 

உப்பாற்று ஓடையில் தனியார் இடத்தில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை விற்பனை செய்யத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

 

கடந்த 2018- ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், உப்பாற்று ஓடைப்பகுதியில் ரசாயன காப்பர் லாக் கழிவுகளை அகற்றப் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

 

இந்த வழக்கு இன்று (28/06/2021) விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை விற்பனை செய்யத் தடை விதித்ததோடு, "ஓடையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் ஆபத்தை விளைவிக்கக் கூடியதா? ஓடையில் காப்பர் கழிவுகளைக் கொட்டியவர்கள் யார்? 2018-ல் பிறப்பித்த உத்தரவை தற்போது வரை ஏன் செயல்படுத்தவில்லை?" எனக் கேட்டு, 12 வாரங்களில் பொதுப்பணித்துறைச் செயலர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

அங்கித் திவாரி ஜாமீன் மனு; நீதிபதி அதிரடி உத்தரவு!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Ankit Tiwari Bail Petition; Judge action order

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றினார்கள்.  இதற்கிடையே திண்டுக்கல் மாவட்ட நிதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் உச்சநீதிமன்றத்திலும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனையடுத்து அங்கித் திவாரி இரண்டாவது முறையாக தனக்கு ஜாமீன் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தனது கைது என்பது விதிமுறைகளுக்கு எதிரானது. கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன். எனவே சட்டப்படி ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு கடந்த 12 ஆம் தேதி (12.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவடிக்குமார், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறது. எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் இந்த வழக்கு நீர்த்துப்போகும்” என வாதிட்டார். மனுதாரர் அங்கித் திவாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்து ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி விவேக்குமார் சிங், “தாம் இன்னும் ஜாமீன் வழங்கவில்லை. ஆனால் மனுதாரர் தரப்பு ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிடுகிறார். இதனால் அங்கித் திவாரியின் வழக்கில் இருந்து விலகுகிறேன். இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை” எனக் கோபத்துடன் தெரிவித்து வழக்கில் இருந்து விலகினார்.  இந்நிலையில் நீதிபதி தண்டபாணி முன்பு இன்று (15.03.2024)  விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவடிக்குமார், “ஒரே நேரத்தில் உயர் நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ள நிலையில் விசாரணைக்கு தடை வாங்கியுள்ளார். எனவே இவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” எனக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

Ankit Tiwari Bail Petition; Judge action order!

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “லஞ்ச ஒழிப்புத்துறை,  அமலாக்கத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை ஒரு போதும்  அனுமதிக்க முடியாது. இதுபோன்ற செயல்களை சகித்துக்கொள்ள முடியாது.  இதனை வேடிக்கை பார்க்க முடியாது. இதுபோன்ற அதிகாரிகள் லஞ்ச வழக்கில் சிக்கும்போது இரும்பு கரம் கொண்டு  அடக்க வேண்டும்.  அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறும் செயல் அதிகரித்திருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது அல்ல. வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையில் லஞ்சம் ஊடுருவி உள்ளதை சகித்துக் கொள்ள முடியாது.  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கு தீவிரமானது. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை  நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது” என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.