நீலகிரியில் கிணற்றுக்குள் விழுந்த குட்டி யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக வனவிலங்குகள் ஊருக்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக காட்டு யானைகள் அதிகப்படியாக உலா வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பந்தலூர் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று இரவு யானை கூட்டம் ஒன்று வந்துள்ளது.
அப்பொழுது கூட்டத்திலிருந்த குட்டி யானை 30 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தது. இதனால் உடன் வந்த யானைகள் சத்தமிட்டது. இரவு முழுக்க குட்டி யானை கிணற்றுக்குள் கிடந்தது. யானைக் கூட்டமும் அங்கிருந்து நகராமல் சத்தமிட்டுக்கொண்டே இருந்தது. யானை கூட்டத்தின் சத்தம் ஊர் மக்களுக்கு அச்சத்தைக் கொடுத்தது.
என்ன நடந்தது என அந்த பகுதி மக்களுக்கு தெரியாமல் இருந்த நிலையில் காலையில் சென்று பார்த்த பொழுது கிணற்றுக்குள் குட்டி யானை விழுந்தது தெரிந்தது. உடனடியாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைக் கூட்டங்களை விரட்டி விட்டு தற்பொழுது குட்டி அணையை மீட்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக ஜேசிபி உதவியுடன் யானை குட்டியை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.