அயோத்தியில் பாபர் மசூதி, கடந்த காலத்தில் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினரால் இடிக்கப்பட்டது. அந்தயிடத்தை இந்து அமைப்புகளும் – இஸ்லாமிய அமைப்புகளும் உரிமைக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. அந்த வழக்கு பல ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது.
அனைத்து தரப்பின் வாதங்கள், விசாரணைகள் முடிந்தநிலையில் அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாகிவிடும் என்கிற எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் உள்ளது. இந்த தீர்ப்பின் மூலமாக நாட்டில் எந்தவித மத மோதல்களும், கலவரங்களும் ஏற்பட்டுவிடக்கூடாதுயென மாநில அரசுகளை, இந்திய ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநில அரசும் அதற்கான பணிகளில் இறங்கியுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, வேலூர், விஷாரம், ஆற்காட்டில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இஸ்லாமிய மதத்தின் முக்கியஸ்தர்களை அழைத்து காவல்துறை பேசிவருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆம்பூர் நகர காவல்துறையின் சார்பில், அயோத்தி தீர்ப்பு வெளியாகும்போது, அதனை எதிர்க்கிறோம் என்றோ அல்லது மகிழ்கிறோம் என தங்களது உணர்சிகளை வெளிப்படுத்தாமல் அமைதி காக்க வேண்டும் என இஸ்லாமிய மதத்தின் முத்தவல்லிகள், இசுலாமிய அமைப்புகள், இசுலாமிய அரசியல் கட்சி பிரமுகர்களிடம் வேண்டுக்கோளை வைத்தனர். அவர்களும் எங்களால் எந்த தொந்தரவும், பிரச்சனையும் வராது என வாக்குறுதி அளித்துவிட்டு சென்றுள்ளனர்.
இதுபோல் ஏன் இந்து இயக்கங்கள், அரசியல் கட்சியினரை அழைத்து பேசவில்லை என்கிற கேள்வியை காவல்துறை முன்பு வைக்கின்றனர் பகுத்தறிவாளர்கள். அயோத்தி வழக்கு என்பது இரு மத மக்களுக்கானது. பாபர் மசூதியை இடித்தது இந்து அமைப்பினர் என்பது குறிப்பிடதக்கது. அதன்பின்பே மதக்கலவரம் ஏற்பட்டது.
அப்படிப்பட்ட முன்வரலாறு உள்ளநிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் இந்து அமைப்புகள், முக்கிய பிரமுகர்கள், கட்சிகள் அமைதி காக்க வேண்டும் எனச்சொல்லி ஏன் காவல்துறை கூட்டம் நடத்தவில்லை என்கிற கேள்வி பல மட்டங்களிலம் எதிரொலிக்கிறது. காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் என்ன சொல்லப்போகிறார்.