புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போட்டித் தேர்வுகள் குறித்த தன்னம்பிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியர் வள்ளிநாயகி தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சி. சின்னச்சாமி, பொருளாளர் ராமன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. நிகழ்ச்சியில் கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து ஐஆர்எஸ் ஆகி முதன்மை வருமானவரி ஆணையர் - கூடுதல் செயலாளர் ந.ரெங்கராஜ் கலந்து கொண்டு தன்னம்பிக்கை விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே 50 வீடுகள் மட்டுமே உள்ள போரம் கிராமம் எனது சொந்த ஊர். அந்த ஊரில் 2 பேர் மட்டுமே அரசு வேலை பார்த்தனர். அதில் ஒருவர் 3ம் வகுப்பு மட்டுமே படித்த எனது தந்தை. முதலில் வாச்சுமேனாக ரூ. 50 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்து பியூனாக ரூ. 600 சம்பளம் வாங்கினார். ரோடு, மின்சாரம் வசதி இல்லாத கிராமம். எனது தந்தை வேலைக்காக கீரமங்கலம் வந்து தங்கிய போது கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1981-1983ல் படிச்சேன். அறிவியல் பாடப்பிரிவு கேட்டேன். உனக்கு அறிவியல் பாடம் கொடுக்க முடியாது, கணக்கும் வராது என்று சொன்னார் தலைமை ஆசிரியர் பச்சையப்பன். வணிகவியல் பிரிவு தான் கிடைத்தது. அப்போது ஒரு ஆசிரியர் இனிமேல் அரசு வேலைக்கு போட்டித் தேர்வுகள் தான் எழுத வேண்டும் என்று சொன்னார்.
கிடைத்த வணிகவியல் பாடப்பிரிவில் படித்து நல்ல மதிப்பெண் பெற்ற நான் புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பி.காம் சேர்ந்து படித்த போது முதலாம் ஆண்டிலேயே எஸ்.எஸ்.சி போட்டித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். டெல்லியில் வேலை. ஆனால் என் தந்தை டிகிரியை முடிச்சுட்டு பெரிய வேலைக்கு போ என்றார். அதனால் அந்த வேலையை வேண்டாம் என்றேன். அதன் பிறகு ரயில்வே, அஞ்சல் துறை, இன்சூரன்ஸ் நிறுவனம் என பல நிறுவனங்களிலும் வேலைக்கான தேர்வெழுதி தேர்வாகி வேலைக்கு போகவில்லை. தொடர்ந்து எம்.காம் முடித்து எம்ஃபில் சேர முயன்றபோது வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதன் பிறகு தான் யூபிஎஸ்சி க்கான தேர்வுக்கு பயிற்சி அளிக்க மாணவர் தேர்வுக்காக அரசு பயிற்சிக்கு விண்ணப்பம் செய்தேன். 2 ஆயிரம் பேரில் 5வது ஆளாகத் தேர்வாகி சென்னையில் பயிற்சி பெற்று வாராந்திரத் தேர்வுகளில் நல்ல முறையில் தேர்வானதால் பயிற்சியாளர்கள் என்மீது அக்கறை கொண்டனர். 5 லட்சம் பேர் எழுதி யூபிஎஸ்சி தேர்வில் 11 ஆயிரம் பேர் தேர்வானதில் நானும் ஒருவன். தொடர்ந்து எனக்கு 1991ல் ஐ.ஆர்.எஸ் கிடைக்கிறது. மாவட்டத்தில் நான் முதல் ஐஆர்எஸ் என்ற சிறப்பும் கிடைத்தது. எல்லாமே முதல் முயற்சியிலேயே முடிந்தது. இன்று உயர்ந்த இடத்தில் அதிகபட்ச சம்பளம் வாங்குகிறேன். இதுவரை 350 வருமானவரித்துறைச் சோதனைகள் செய்திருக்கிறேன். 12 மாவட்டத்துக்கு அதிகாரி. ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டிக் கொடுக்க வேண்டும். பெரிதாக ஆசைப்படுங்கள். இலக்கை அடைய முயற்சி செய்யுங்கள். தினசரி செய்தித் தாள்கள் ரொம்ப அவசியம் படிக்க வேண்டும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி உங்கள் கவனத்தை திசை திருப்பிவிடும் கவனமாக இருக்க வேண்டும்.
அசாம் மாநிலத்தில் தேர்தல் பணிக்கு போயிருந்த போது, உல்பா பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் இருந்து மீண்டேன். அதே போல 1997ல் ஒரு வீட்டில் ரைடுக்கு போன போது, மேல் மாடியிலிருந்து ஒருவன் ஒரு பெரிய சூட்கேசை தூக்கி வெளியே போட முயன்றபோது அதை ஏணி வைத்து ஏறி உள்ளே தள்ளிவிட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தால் துப்பாக்கியோடு நின்றான். அதனை சமாளிக்க எங்கள் கையில் இருந்த பெட்டியை தூக்கி வீசி கவனத்தை திசை திருப்பி உள்ளே நுழைந்து ரூ.2.50 கோடியை மீட்டோம்.
ஒவ்வொரு முறையும் நாம் ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்று வருந்தக் கூடாது. எனக்கு அறிவியல் பாடப்பிரிவு கிடைத்திருந்தால் நான் மருத்துவம் படிக்க போய் இருக்கலாம். முதல் போட்டித் தேர்வில் தேர்வானதும் கிளர்க் வேலைக்கு போய் இருந்தால் இன்று இந்த உயர்ந்த பதவிக்கு வந்திருக்க முடியாது. சில நேரங்களில் நினைத்தது கிடைக்கவில்லை என்பதும் நல்லதுக்கே என்று நினைக்கிறேன். ஆகவே ஆசைப்படுவதை பெரிதாக ஆசைப்படுங்கள்” என்றார்.