தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டியுள்ளது.
இன்று மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை இன்று (15-01-24) 7 மணிக்கு அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில், 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மொத்தம் ஒன்பது சுற்றுகள் நடைபெற்ற முடிந்த நிலையில் தற்போது பத்தாவது சுற்று நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு பெற்ற கார்த்திக் இந்த வருடம் 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்துள்ளார். 13 காளைகளை அடக்கி ரஞ்சித் குமார் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார், 9 காளைகளை அடக்கி முரளிதரன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில், சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும் பரிசாக வழங்கப்படுகிறது. அதேபோல், சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் 2 பசுமாடுகள் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.