திருச்சி மாநகர் மாவட்ட ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ;நாட்டில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஆட்டோ ஓட்டுவதற்கான பல்வேறு வழிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகளை மட்டுமே ஏற்றிக்கொண்டு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இ - பதிவு செய்த பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே தமிழ்நாடு அரசு இ - பதிவு முறையை உடனே ரத்து செய்ய வேண்டும். ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஓட்டுநர்களுக்கும் ரூபாய் 7,500 நிவாரணம் வழங்க வேண்டும்.
தவணைத் தொகை, வாகனங்களுக்கான FC உரிமம் புதுப்பிக்கும் காலம் உள்ளிட்ட அனைத்தையும் டிசம்பர் 2021வரை நீட்டித்து கால அவகாசம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் ரங்கராஜ், மாவட்ட தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.