வனப்பகுதியில் சுற்று வட்டச் சாலை அமைப்பதற்காக மரங்களை வெட்டக் கூடாது என ஆரோவில் அறக்கட்டளைக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர் நவ்ரோஸ் மோடி என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரோவில் அறக்கட்டளை, எந்த வித அனுமதியும் இன்றிக் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளதாகவும், தற்போது சுற்றுவட்ட சாலை அமைப்பதற்காக வனப்பகுதி எனக் கருதப்படும் இடத்தில் ஏராளமான மரங்களை வெட்டியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், மரங்களை வெட்டக் கூடாது என ஆரோவில் அறக்கட்டளைக்கு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. மேலும், இந்த மனுவிற்கு பதிலளிக்கும் படி, தமிழ்நாடு அரசுக்கும், ஆரோவில் அறக்கட்டளைக்கும் உத்தரவிட்டு, விசாரணையை வரும் டிசம்பர் 17- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.