
சென்னையில் சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய சிறுமியின் அத்தை உள்ளிட்ட மூன்று பெண்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் செய்த சோதனைகளின் அடிப்படையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும், சிறுமி கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு மருத்துவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்தாண்டு காலாண்டு தேர்வு விடுமுறையில் அத்தை வீட்டிற்கு வந்திருந்த சிறுமியை அத்தை மற்றும் மூன்று பெண்கள் சேர்ந்து பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுமி கர்ப்பம் ஆனது தெரியவந்தது. இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய சிறுமியின் அத்தை மற்றும் மூன்று பெண்களை கோயம்பேடு காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.