புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி(அதிமுக) தனது ஆதரவாளர்களிடம் பேசியதாக ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பாகி கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் பரவிய அந்த ஆடியோ நக்கீரன் இணையத்தில் செய்தியாகவும் ஆடியோவும் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று ரத்தினசபாபதி எம்எல்ஏ செய்தியாளர்களுக்கு ஒரு அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது..
“தொகுதியில் எனக்கு இருக்கும் நல்ல பெயரையும், நன்மதிப்பையும் சீர்குலைக்கும் வகையில் சில விஷமிகள் என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு நான் சொல்லாத வார்த்தைகளை சொல்லியதாக வீண் வதந்திகளை வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு காரணமானவர்கள் சட்டப்படி கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை பொறுத்தவரை 45 ஆண்டு கால பொதுவாழ்க்கையில் எல்லா மதத்தினருக்கும், இனத்தினருக்கும் பொதுவானவராகவே நடந்து கொண்டிருக்கிறேன். இனியும் எல்லோரையும் சகோதரர்களாகவே கருதுகிறேன். சில உள்குத்து அரசியல்வாதிகளுடைய விஷத் தன்மையுடைய இந்த பிரச்சாரத்தை நம்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.