காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி இந்தியா முழுதும் சுமார் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாட இருக்கிறார். இந்த பயணத்திற்கான திட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு கன்னியாகுமரியிலிருந்து நடைபயணத்தை இன்று ராகுல் துவங்கியுள்ளார்.
தற்பொழுது கன்னியாகுமரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேடையில் பேசிய ராகுல்காந்தி, '' தமிழகத்திற்கு வந்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். ஒற்றுமை பயணத்தை துவங்கிவைத்து வாழ்த்துக் கூறிய சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. இந்த நாட்டில் இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்துவதற்கு இப்பொழுது ஒரு தேவை இருக்கிறது என்பதை மனப்பூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள். தேசத்தை ஒற்றுமை படுத்தவேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது என்ற உணர்வின் காரணமாகத்தான் இந்த பாத யாத்திரை. நமக்கு முன்னாள் பறக்கும் இந்த தேசியக் கொடியை பார்க்கிறோம். கொடியை பார்க்கும் போதெல்லாம் அதன் மாட்சிமைக்காக போற்ற வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் சிலர் தன்னை வெறும் மூன்று வண்ணங்களை கொண்ட துணியாக பார்க்கிறார்கள்.
இந்திய மக்களை பாஜக புரிந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகளை சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்துக் கட்டுப்படுத்த நினைக்கிறார்கள். மதம், மொழியை வைத்து நாட்டை பிளவுபடுத்த நினைக்கிறது பாஜக.ஆனால் அது நடக்காது. மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டத்திற்கு இந்தியா உள்ளாகியுள்ளது. விலைவாசி விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கும் காலகட்டத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆங்கிலேய ஆட்சியின் அணுகுமுறைதான் தற்பொழுது பாஜக ஆட்சியிலும் இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை சில தொழிலதிபர்கள் கட்டுக்குள் கொண்டு வைத்திருக்கிறார்கள்.