ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் நாளை (செப்டம்பர் 29) முதல் வாங்கப்படமாட்டாது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்திருந்தது. புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதிக்குள் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என மத்திய அரசு கூறி இருந்த நிலையில், ஆம்னி பேருந்துகளில் வழக்கமாக 90 சதவீதம் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது. 10% மட்டுமே பயணிகள் கடைசி நேரத்தில் டிக்கெட் புக்கிங் செய்ய நேரில் வந்து புக்கிங் செய்கின்றனர். இந்நிலையில் இன்று முதல் மத்திய அரசின் கெடு நிறைவடைந்த நிலையில், நாளை 29 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து ஆம்னி பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டை பயணிகள் கொடுத்து டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.