சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று (23.07.2024) முதல் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி (14.08.2024) வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தினசரி காலை 09.30 மணி முதல் பிற்பகல் 13.30 மணி வரையும் மற்றும் இரவு 10.00 மணி முதல் 11.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரையும் இயக்கப்படும். அதே போன்று செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது.
எனவே, இவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று முதல் (23.07.2024) முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி (14.08.2024) வரை குறிப்பிட்ட நேரங்களில் பல்லாவரம் வழியாக கூடுவாஞ்சேரிக்கு தற்போது 60 பேருந்துகள் மூலம் 571 பயண நடைகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் விமான நிலையம் மெட்ரோ முதல் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 50 பெரிய பேருந்துகளை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதே சமயம் பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் மற்றும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் முதல் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் சுற்றுப் பேருந்து சேவையாக (shuttle service) இயக்க உள்ளது. எனவே இந்த நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய சூழலில் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் தாம்பரம் யார்டின் பராமரிப்பு பணிகளுக்காக இன்று முதல் ரத்து செய்யப்பட்டிருந்த பகல் நேர புறநகர் ரயில் சேவைகள் இன்று முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (02.08.2024) வரை வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும். இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணி வரை மட்டும் புறநகர் ரயில் சேவைகள் முன்பு அறிவித்தது போலவே இயங்காது. அதற்கு மாறாகச் சிறப்பு பயணிகள் இரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு பேருந்துகள் தேவையின் அடிப்படையில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.