விழுப்புரம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ளது முண்டியம்பாக்கம். இந்தப் பகுதியில் ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டுவருகிறது. நேற்று (21.12.2021) அதிகாலை அங்குள்ள ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. விக்கிரவாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன், தலைமை காவலர் மகாராஜா உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த 30 வயதே மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அந்த ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளதாகக் கூறி அவரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், அவர் தெலுங்கு மொழி மட்டுமே பேசுவதால் தெலுங்கு பேசத் தெரிந்த ஒரு போலீசாரை வரவழைத்து அவர் மூலம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த வாலிபரின் புகைப்படத்தை அவர் வசித்துவரும் ஆந்திர மாநிலம் தெலங்கானா காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர். இவர் மீது அங்கு ஏதேனும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா எனவும் விசாரணை செய்தனர். அதில் இவர், தெலங்கானா மாநிலம் கர்னூல் பகுதியில் உள்ள குண்டக்கல் கிராமத்தைச் சேர்ந்த காசிம் சண்டி என தெரியவந்தது. இவரை கைது செய்யும்போது அவர் கையில் ஒரு ஏடிஎம் கார்டு வைத்திருந்துள்ளார்.
இவர் ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்க வந்தவரா? அப்படி எடுக்க வந்தவர் என்றால் மிஷினை உடைக்க வேண்டிய அவசியம் என்ன? இப்படி பல்வேறு கோணத்தில் போலீசார் அவரிடம் விசாரணை செய்து அவர் மீது ஏடிஎம் மெஷினில் கொள்ளையடிக்க வந்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த இளைஞர் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் முண்டியம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.