புதுக்கோட்டை மாவட்ட பாஜக மாவட்டத் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் நகரத்தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் ஜெகதீசன் நேற்று திங்கட்கிழமை மாலை அறந்தாங்கியில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்தஅறந்தாங்கி பாஜக நகரத் தலைவர் மீனாவின் கணவரும் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான இளங்கோவன் மேடைக்கு வந்தார். அழைக்காதவர்கள் ஏன் வந்தீர்கள் என மாவட்டத் தலைவர் கேட்டதால் பிளாஸ்டிக் சேரை எடுத்து மாவட்டத் தலைவர் ஜெகதீசனை இளங்கோவன் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் ஜெகதீசன்கொடுத்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை பாஜக தலைமை கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவனை அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கியுள்ளது. அதேபோல இளங்கோவனின் மனைவியும் நகரத் தலைவருமான மீனாவையும் நீக்கி உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.