சென்னையில் எஸ்பிஐ டெபாசிட் இயந்திரங்களைத் தேர்வுசெய்து வடமாநில கொள்ளையர்கள் கடந்த வாரம் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏடிஎம்களில் இருந்து 48 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில், இந்த சம்பவம் ஏடிஎம் கொள்ளைக்குப் பெயர்போன மேவாட் கொள்ளையர்களால் நடத்தப்பட்டது என காவல்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று கொள்ளையர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், 23ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் அமீர் ஆர்ஷ் என்ற கொள்ளையனைக் கைது செய்தனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் அமிர் ஆர்ஷை, சென்னை பெரியமேடு பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்திற்கு காவல்துறையினர் அழைத்துவந்தனர். அதனைத் தொடர்ந்து அந்நபர் தானும், தனது குழு நபர்களும் ஏ.டி.எம்.களில் எப்படி கொள்ளையடித்தனர் என்பதைச் செய்முறை மூலமாக விளக்கினார்.