விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ளது கள்ளப்புலியூர். இந்த கிராமத்தைச் சேர்ந்த நேமி தாஸின் மகன் சுரேஷ்குமார்(41). இவர்கள் இருவரும் தங்களது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுக்க செஞ்சி, திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு காரில் சென்றுள்ளனர். நேமி தாஸ் காரிலிருந்து இறங்கி ஏ.டி.எம். மையத்திற்குச் சென்றுள்ளார். மகன், சுரேஷ்குமார் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு மீண்டும் தந்தையிடம் செல்வதற்குள் அந்த இடைப்பட்ட நேரத்தில் அப்பகுதியில் இருந்த மர்ம நபர் ஒருவர் நேமி தாஸ் வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை வாங்கி அவருக்கு பணம் எடுத்துக் கொடுத்து உதவி செய்வதாக கூறி பணம் எடுத்து கொடுத்துள்ளார்.
பின்னர் அந்த ஏ.டி.எம். கார்டை நேமி தாஸிடம் கொடுக்காமல் கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர் தலைமறைவாகி விட்டார். தந்தை மகன் இருவரும் செய்வது அறியாமல் திகைத்துள்ளனர். தலைமறைவாகிய அந்த நபர் சிறிது நேரத்தில் நேமி தாஸ் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்சத்தி தொண்ணூற்று ஏழாயிரம் ரூபாய் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்திருக்கிறார். பணம் எடுத்ததற்கான குறுஞ்செய்தி நேமி தாஸ் செல்போனுக்கு வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமார், செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம்-ல் மோசடியான முறையில் பணம் பறித்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.