தமிழகத்தில் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். கன்னிவாடியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சித் தலைவர் பாஸ்கரன், ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சத்தியமூர்த்தி, கல்லூரி முதல்வர் ஜாஸ்ஏஞ்சலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, “தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளையும் ஏற்று மிகவும் பின்தங்கிய பகுதியில் அரசு கல்லூரிகளை திறந்து வைத்துள்ளார். மிகவும் பின்தங்கிய பகுதியான ஆத்தூர் தொகுதி ரெட்டியார்சத்திரத்தில் ஒரு கல்லூரி வருவதென்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. குறிப்பாக கடந்த ஆட்சிக் காலத்தில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு கல்லூரி வருவது கனவாகத்தான் இருந்தது. ஆனால் இன்றைக்கு நம்முடைய மாவட்டத்திற்கு நம்முடைய ஆத்தூர் தொகுதியில் மட்டும் தமிழக முதல்வர் கூட்டுறவுத்துறைக்கு ஒரு கல்லூரியை வழங்கியுள்ளார். அதேபோல் அரசு கல்லூரி வேண்டும் என்று கேட்டதின் பேரில் அதையும் தந்தார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் நமக்கு மருத்துவ கல்லூரியை தந்ததுபோல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கூடுதலாக ஒரு மருத்துவக் கல்லூரியை வழங்குவார். திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லை வடக்கே கரூர் வரையிலும், மேற்கே உடுமலைப்பேட்டை வரையிலும் உள்ளது. அனைவரும் பயன்பெறும் வகையில் வருங்காலங்களில் மருத்துவக்கல்லூரி புதிதாக நமக்கு கிடைக்கும்.
கன்னிவாடியை பொறுத்தவரையில் நீண்ட நெடுங்காலமாக பேருந்து நிலையம் வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது ஆறுகோடி செலவில் நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த முறை கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, நாம் கேட்டவுடன் அண்ணாவின் பெயரில் இன்ஜினியரிங் கல்லூரியை திண்டுக்கல்லுக்கு கொடுத்தார். ஒரு மாவட்டத்தில் ஒரு கல்லூரி இருந்தால் இன்னொரு கல்லூரி தேவையில்லை என்பார்கள். அரசின் நிதிநிலை இடம் கொடுக்கவில்லை என்றாலும் நம்முடைய முதல்வருடைய மனம் எப்போதுமே இடம் கொடுக்கும். விரைவில் திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைய வாய்ப்புள்ளது” என்று கூறினார். இந்த விழாவில் கட்சி பொறுப்பாளர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.