


புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டை கிராமத்தில் உள்ள சங்ககாலக் கோட்டையின் உள்பகுதியில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் முனைவர் இனியன் தலைமையில் 20 நாட்களுக்கு மேலாக அகழாய்வும் பணிகள் நடந்து வருகிறது. அகழாய்வில் பலவகையான கருப்பு சிவப்பு பானை ஓடுகள், மணிகள், இரும்பு ஆணி கிடைத்தது.
தொடர்ந்து சுமார் ஒன்றேமுக்கால் அடி ஆழத்தில் சங்ககால சுடு செங்கல் கட்டுமானத்தில் தண்ணீர் செல்லும் நீர்வழிப்பாதை கண்டறியப்பட்டது. மேலும் குடுவைகள், சிறிய உடைந்த பானைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அகழாய்வுப் பணிகளை தொல்லியல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், பொதுமக்களும் பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு தொல்லியல்துறை இணை இயக்குநர் சிவானந்தம் மற்றும் தொல்லியல் அறிஞர் கே.ராஜன் ஆகியோர் பொற்பனைக்கோட்டைக்கு வந்து அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டு அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் தகவல்களை கேட்டறிந்தப் பிறகு அகழாய்வுக் குழுவினரை பாராட்டினார்கள்.
விரைவில் கட்டுமானம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் அகழாய்வுக் குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம், பொற்பனைக்கோட்டை நேதாஜி இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் உதவிகள் செய்து வருகின்றனர்.