தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த திமுக ஆட்சியின் போது வருமானத்திற்கு அதிகமாக 1 கோடியே 36 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்து சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக பொன்முடி மீதும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் அதிமுக ஆட்சிக்காலத்தில் வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து கடந்த நவம்பர் 7 ஆம் தேதி முதல் வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், இதில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் முகாந்திரம் இல்லை என பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவிப்பதாக வழக்கை விசாரித்த நீதிபதி வசந்த லீலா கடந்த ஜூன் மாதம் தீர்ப்பு வழங்கி இருந்தார்.
இந்நிலையில், வேலூர் மாவட்ட நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்து தீர்ப்பளித்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த விசாரணை இன்று மாலை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெஙகடேஷ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.