சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜய பாஸ்கர் புதுக்கோட்டை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
தற்பொழுது விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.
ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை அமைச்சராக இருந்த நேரத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிக்கையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த ஐந்தாம் தேதி நேரில் ஆஜரானார். தொடர்ந்து அவரது மனைவி ரம்யாவையும் விஜயபாஸ்கரையும் இன்றைய தினத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, இன்று காலை நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர் ஆகினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செப்டம்பர் 26 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.