நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழனிசெட்டிபட்டி பகுதியில் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''சாதம் வடிக்க வேண்டும் என்றால் குக்கரில் தான் வடிக்க வேண்டும். குக்கரை பார்த்த உடனே டிடிவி தினகரன் ஞாபகம் வர வேண்டும். இந்த முறை என்னை வெற்றிபெறச் செய்வீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் குக்கர் ஜெயிக்கணும். எப்படி ஆர்கே நகரில் ஜெயிச்சு டெபாசிட் போக வைத்ததோ அப்படி பணம், காசு எல்லாவற்றையும் தாண்டி குக்கர் ஜெயிக்க வேண்டும்.
இன்னும் சில பேர் ஓட்டு கேட்க வருவார்கள். மோடி தான் இந்தியாவிற்கு மூன்றாவது முறையாக பிரதமராக வர இருக்கிறார். இந்த தேர்தல் பாராளுமன்றத்திற்கான தேர்தல். யார் இந்தியாவுடைய பிரதமர் என்பதற்கான தேர்தல். இந்த தேர்தலில் மோடிதான் எங்களுடைய பிரதமர் என்று ஓட்டு கேட்கலாம். மற்ற கூட்டணிகள் யாரைச் சொல்லி ஓட்டு கேட்கப் போகிறது? உதயசூரியனில் யாரைச் சொல்லிக் கேட்க போகிறார்கள்? நீங்கள் வந்தால் கேட்க வேண்டும். உங்களுக்கு யாருப்பா பிரதமர் வேட்பாளர் என்று கேட்க வேண்டும். இன்னொரு கட்சி இரட்டை இலையை தூக்கிக்கொண்டு வரும். அவங்க என்ன பழனிசாமியை பிரதமராக்க போறாங்களா? திமுக வேட்பாளர் கூட எத்தனை அமைச்சர்கள் வந்தாலும் அவர்களிடம் கேளுங்கள் யார் உங்க பிரதமர் வேட்பாளர் என்று, ஜனநாயக நாட்டில் கேட்கலாமே?''என்றார்.