எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டிய பொதுக்குழுவைச் செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அ.தி.மு.க.வில் ஜூன் 23- ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த மேல்முறையீடு வழக்கில் விசாரணைகள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்ராமன் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில், 'கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ''இன்று வரலாற்று சிறப்புமிக்க நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 23ஆம் தேதி நடத்தப்பட்ட அதிமுகவின் பொதுக்குழு மற்றும் அதில் எடுத்து முடிவு செல்லும், அந்த பொதுக்குழுவின்போது அறிவிக்கப்பட்ட 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவும் செல்லும், அன்று எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எல்லாம் செல்லும் என்று வரலாற்று சிறப்புமிக்க நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். இதை நாங்கள் வரவேற்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் பாராட்டுகிறார்கள், வாழ்த்துகிறார்கள்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'கடந்த முறை தீர்ப்பு வந்த பொழுது ஓபிஎஸ் தரப்பு எடப்பாடி தரப்பை இணைந்து செயல்பட அழைத்தது. இன்றைய தீர்ப்புக்குப் பிறகு அடுத்த கட்டமாக ஓபிஎஸ் தரப்பில் இருந்தவர்களை நீக்கியது தொடருமா அல்லது கட்சிக்குள் மீண்டும் ஓபிஎஸ் இணைக்கப்படுவாரா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த திண்டுக்கல் சீனிவாசன் ''தீர்ப்பில் என்ன வந்திருக்கோ, அன்னைக்கு என்னென்ன தீர்மானங்கள் போடப்பட்டதோ அது அத்தனையும் இன்னைக்கு செல்லும் என வந்துவிட்டது. நீங்கள் கேட்ட கேள்விக்கு எல்லாம் அதிலேயே பதில் இருக்கிறது. மற்ற எதையாவது கேட்க வேண்டும் என்றால் யார் யார் என்னென்ன சொன்னார்களோ அவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். போலாமா நான்... வாழ்க வணக்கம்'' என சொல்லிவிட்டு கிளம்பினார்.