கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற நிர்மலாதேவி விவகாரம் விஸ்வரூபமெடுத்து, வழக்கு விசாரணை என மெதுவாகப் பயணித்துவரும் நிலையில், மாணவிகள் சாலையில் அமர்ந்து போராடும் அளவுக்கு வேறொரு கல்லூரியில் நடந்த பாலியல் விவகாரம் அருப்புக்கோட்டையில் உஷ்ணத்தைக் கிளப்பியிருக்கிறது.
கல்லூரி மாணவிகளின் ஆவேசத்துக்கு யார் காரணம்?
மத்திய அரசு சுகாதாரத்துறையின் ஆதரவைப் பெற்ற எலக்ட்ரோபதி மருத்துவக் கவுன்சிலான NEHM of India-வின் நேரடி அங்கீகாரம் பெற்றதாகச் சொல்லிக்கொள்ளும் அரசு எலக்ட்ரோ ஹோமியோபதி மெடிக்கல் கல்லூரி, ‘எம்.பி.பி.எஸ்.க்கு நிகரான படிப்பு! நீங்களும் டாக்டர்தான்! உங்கள் டாக்டர் கனவு நிஜமாக உடனே சேருங்கள்!’ என விளம்பரப்படுத்த, அருப்புக்கோட்டையில் ஒரு வாடகைக் கட்டித்தில் இயங்கும் அந்தக் கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்து படித்துவருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜான் டேஸ்வின், சேர்மன் பொறுப்பில் இருந்து அக்கல்லூரியை நடத்திவரும் நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு அவரே ஆளாகியிருக்கிறார்.
அந்தக் கல்லூரி மாணவிகளின் கோரிக்கை இது – ‘அனைத்து மாணவிகளின் சார்பாக இக்கல்லூரியில் நடக்கும் தவறுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறோம். கல்லூரி சேர்மன் ஜான் டேஸ்வின், மாணவிகளின் ஏழ்மையைப் பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துவருகிறார். அந்த மாணவி எங்கள் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். கஷ்டப்படும் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த மாணவியைத் தனியாக அழைத்து பாலியல் தொந்தரவு செய்திருக்கிறார். ஒருகட்டத்தில், அந்த மாணவியை வீடியோ-காலில் பேசவைத்தார். மேலும், அந்த மாணவியிடம் சக மாணவிகள் குறித்து கேட்டறிந்து, அவர்களையும் அவ்வாறு நடந்துகொள்ளத் தூண்டியிருக்கிறார். இதனை நிரூபிப்பதற்கு எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. எங்களைக் காப்பாற்றுங்கள். தவறு நடந்தபின் காப்பதைவிட, தவறே நடக்காமல் காப்பதுதான் நீதி. ஜான் டேஸ்வினுக்குக் கிடைக்கும் தண்டனை, மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும். இக்கல்லூரியை மூடிவிட்டால், எங்களது படிப்பு கேள்விக்குறியாகிவிடும். உடன் படிக்கும் மாணவிக்கு இப்படி ஒரு பாலியல் கொடுமை நடந்தபிறகு, எங்களுக்கு மிகவும் பயமாக இருக்கிறது. நாங்கள் படிப்பை நிறுத்தாமல், மாற்றாக வேறொரு கல்லூரியில் படிக்க உதவுங்கள்.’ என உருக்கமாகக் கூறியுள்ளனர்.
கல்லூரி மாணவிகள் சார்பாக அருப்புக்கோட்டை டவுன் காவல்நிலைய ஆய்வாளருக்கும் புகார் தரப்பட்டுள்ளது. அதில் ‘கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவிகளைத் தனியாக அழைத்து, சேர்மன் ஜான் டேஸ்வின் தவறாகப் பேசுகிறார். மாணவிகளுக்கு வாட்ஸ்-ஆப் மூலம் ஆபாச போட்டோக்களை அனுப்பி, பாலியல் தொல்லை தருகிறார். இதற்கு உடந்தையாக இருந்த, அங்கு ஆசிரியர்களாகப் பணியாற்றும் கார்த்திக், இந்துமதி, அன்பு ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தக் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்துச் செய்யவேண்டும்.’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
சேர்மன் ஜான் டேஸ்வின் காவல்துறையின் பிடிக்குள் வந்துவிட, அரசு எலக்ட்ரோ ஹோமியோபதி மெடிக்கல் கல்லூரியின் நிர்வாகத் தரப்பில் விளக்கம் கேட்பதற்கு கைபேசி எண்களில் தொடர்புகொண்டோம். தொடர்ந்து ஸ்விட்ச்-ஆப் நிலையில் இருந்தது. அவர்கள் விளக்கம் அளிக்க முன்வந்தால் பிரசுரிக்கத் தயாராக உள்ளோம்.
அக்கல்லூரி நிர்வாகத்தின் தட்ப வெப்பத்தை அறிந்த ஒருவர் நம்மிடம் பேசினார். “ஒரு கல்லூரி நிர்வாகியா இருந்துக்கிட்டு, ஆபாசமாக சாட் பண்ணுனது, மாணவியையும் அப்படி நடக்கச் சொன்னதெல்லாம் ரொம்பத் தப்பு. அதுவும் ரொம்பக் கேவலமா பேசி, அந்த மாணவியை வெளியூருக்கு வரச்சொன்னதும் நடந்திருக்கு. அந்த வாட்ஸ்-ஆப் சாட்டிங்ல, படிக்கச் சகிக்காத அருவருப்பான விஷயங்கள் நிறைய இருக்கு. இது ஒருபக்கம் இருந்தாலும், விஷயம் லீக் ஆனதுக்கு வேறு ஒரு காரணமும் இருக்கு. வசமா மாட்டிக்கிட்டாரு ஜான் டேஸ்வின்.” என்றார்.
எந்த ஒரு புகாருக்கும் முதல் தகவலறிக்கை பதிவு செய்யும் வழக்கம் இல்லாத அருப்புக்கோட்டை டவுன் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகனைத் தொடர்புகொண்டோம். “ஜான் டேஸ்வின் போலீஸ் பிடியிலதான் இருக்காரு. புகார் ஸ்ட்ராங்கா இருக்கு. சந்தேகமே வேண்டாம். உறுதியா வழக்கு பதிவு செய்வோம். நடவடிக்கை எடுப்போம்.” என்றார்.
தற்போது கட்சியில் எந்த ஒரு பொறுப்பிலும் ஜான் டேஸ்வின் இல்லை என நம்மிடம் வேகமாக மறுத்தது விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. உன்னதமான கல்விச் சேவையின் பெயரால் ‘கெட்டது’ எங்கே நடந்தாலும், சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.