அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து, காதலி மாரீஸ்வரியைக் கொலை செய்து கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார் மாரிபாண்டி.
காதலியை ஏன் கொலை செய்தார் மாரிபாண்டி?
சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் மாரிபாண்டி, கணவனைப் பிரிந்து வாழும் மாரீஸ்வரியைக் காதலித்தார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததால், இது கள்ளக்காதலாகவே பார்க்கப்பட்டது. மாரிபாண்டிக்கு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதையறிந்து துடித்துப்போன மாரீஸ்வரி, தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். அதனால், இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே திருமணம் ஆகி கணவனைப் பிரிந்து வாழ்பவர் என்பதால், மாரிபாண்டியின் கண்களுக்குப் பழசாகவே தெரிந்தார் மாரீஸ்வரி. ஆனாலும், தன்னுடைய உடல் தேவைக்கு மாரீஸ்வரியைப் பயன்படுத்தி வந்தார் மாரிபாண்டி. திருமணம் செய்துகொள்வதன் மூலம், புத்தம் புதிதாக மனைவி ஒருத்தி கிடைப்பாள் என்ற எண்ணம் தலைதூக்கியது. அதனால், மாரீஸ்வரியை வெறுக்க ஆரம்பித்தார். அவளோ, ‘இத்தனை காலம் உன்னோடு மறைமுக வாழ்க்கை நடத்தியிருக்கிறேன். என்னை எப்படி கைவிடலாம்? நான் கசந்துவிட்டேனா? இன்னொருத்தியுடன் நீ வாழ்க்கை நடத்த விடமாட்டேன்.’ என்று கோபத்தில் திட்டியிருக்கிறாள். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மாரிபாண்டி, மாரீஸ்வரியைக் கொலை செய்து, வெள்ளையாபுரத்தில் உள்ள ஒரு கிணற்றில் உடலை வீசிவிட்டு தலைமறைவானார்.
அந்த வழியே சென்றவர்கள், கிணற்றில் பெண் சடலம் மிதப்பதைக் கண்டு திருத்தங்கல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் மாரிபாண்டி!