அதிவேகமாக பைக் ரெய்டு செய்து பிரபலமானவர் யூடியூபர் டி.டி.எப்.வாசன். அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கி சில முறை கைதும் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் 'மஞ்சள் வீரன்' எனும் திரைப்படத்தில் கமிட் ஆகி இறுதியில் அப்படத்தின் இயக்குநருக்கும் டி.டி.எப்.வாசனுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்நிலையில் டி.டி.எப்.வாசனின் கடையில் திருட்டு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டி.டி.எப்.வாசனும் அவருடைய நண்பர் அப்துல் அனீஸ் என்பவரும் சேர்ந்து அம்பத்தூர் அயப்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் பைக் ரேசிங் செய்வதற்காக பயன்படுத்தும் உபகரணங்கள் விற்கும் கடையை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு சுமார் பத்து முப்பது மணிக்கு கடை மூடப்பட்ட நிலையில் காலை கடையைத் திறக்க வந்த பொழுது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த தலைக்கவசங்கள் மற்றும் கல்லாவில் இருந்த 30,000 ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. உடனடியாக கடையிலிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த பொழுது இரண்டு நபர்கள் ஹெல்மெட் அணிந்தபடி உள்ளே வந்து கடையில் திருட்டில் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகி இருந்தது.
திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மழைக்கு கடை பக்கத்தில் ஒதுங்குவதைப் போல வந்த இரண்டு நபர்கள் திடீரென கடையை உடைத்து உள்ளே சென்று பொருட்களைத் திருடிச் சென்ற காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.