ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தமிழக மக்களின் மனசாட்சியை உலுக்கியது "பாண்டியன் ஸ்டோர்ஸ்' நெடுந்தொடரில் முல்லை கேரக்டரில் நடித்த சித்ராவின் தற்கொலை. அப்போது சித்ராவின் கணவர் ஹேமந்த் சர்ச்சைக்குள்ளானார்.
கடந்த வாரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்ற ஹேமந்த், "எனது மனைவி சித்ரா (ரிஜிஸ்தர் கல்யாணம் மட்டும்) 09-12-2020-ல் மரணமடைந்தார். அதற்குப் பின்னணியில் அப்பொழுது ஆட்சியில் இருந்த கட்சியின் அமைச்சர்கள்தான் இருந்தார்கள். அவர்கள் ஒரு மாஃபியா மற்றும் போதைக் கும்பலை ஏவி விட்டு என்னை மிரட்டுகிறார்கள். பணம் கேட்டு மிரட்டும் அந்தக் கும்பலில் இமானுவேல் உட்பட ஏழுபேர் இருக்கிறார்கள். இந்த கும்பலிடமிருந்து எனது உயிருக்கு பாதுகாப்பு கொடுங்கள். சித்ராவின் மரணத்திற்குப் பின்னணியில் இருக்கும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதும், அவர்களால் இயக்கப்பட்டு என்னை மிரட்டும் இமானுவேல் உள்ளிட்ட கும்பல் மீதும் நடவடிக்கை எடுங்கள்'' என மனு கொடுத்திருக்கிறார்.
ஹேமந்த்தின் புகார் பற்றி மிகவும் சீரியஸாகவே சென்னை நகர போலீசார் விசாரிக்க ஆரம்பித்தனர். சித்ரா சென்னை பூந்தமல்லிக்கு பக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில்தான் இறந்தார். "அவர் இறப்பதற்கு முன்பு, அவரது அறைக்கு இரண்டு வி.ஐ.பி.க்கள் வந்து சென்றிருக்கிறார்கள்' என நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்தது. யார் அந்த வி.ஐ.பி.க்கள் என்பது பற்றி பரபரப்பான செய்திகள் அடிபட்டன.
சித்ரா கடைசியாக பெரம்பலூரில் இளம்பை தமிழ்ச்செல்வன் என்கிற முன்னாள் எம்.எல்.ஏ. வுடன் ஒரு விழாவில் கலந்துகொண்டார். அத்துடன் வட மாவட்டத்தில் சகல செல்வாக்குடன் இருந்த அ.தி.மு.க. அமைச்சரின் மகனுடன் சித்ரா நட்பாக இருந்தார். மேலும் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரின் வாரிசு மற்றும் நவீன போதிதர்மராக கொரோனா நேரத்தில் சித்தரிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் என, பலரது பெயர்கள் சித்ராவோடு இணைத்து பேசப்பட்டது.
உண்மையில் சித்ராவின் மரணத்துக்குப் பின்னணியில் இருந்தது யார் என போலீசார் ஹேமந்த்திடம் கேட்டார்கள். ஒரு அமைச்சர், அவர்தான் திரைப்பட நட்சத்திரங்களுக்கும் சின்னத்திரை நடிகைகளுக்கும் விருது வழங்கும் துறைக்குப் பொறுப்புவகித்தவர். ஒருமுறை விருது வழங்கும் விஷயமாக அவர் சித்ராவை சென்னையில் பிரபலமான லீலா பேலஸ் ஓட்டலுக்கு அழைத்தார். அப்போது சித்ரா, அவருக்கு அறிமுகமானார். தென்தமிழகத்தில் உள்ள தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்தார். இப்பொழுதும் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவர் தொடர்ந்து சித்ராவுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருந்தார்.
"பாண்டியன் ஸ்டோர்' ஷூட்டிங் பூந்தமல்லியில் நடந்துகொண்டிருந்தபோது, புறநகர் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர், சித்ராவிடம் செய்தி அமைச்சர் சொன்னார் என்ற அடிப்படையில் சித்ராவைப் பார்ப்பதற்காக அவர் தங்கியிருந்த விடுதிக்கு வந்து செல்வார். "இந்த இருவரும் ஒரு மாஃபியா கும்பல் மூலம் என்னை மிரட்டுகிறார்கள்' என போலீசாரிடம் ஹேமந்த் சொன்னதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி ஹேமந்த் மீடியாக்களில் பேசவில்லை. அவர் மாஃபியா கும்பல் என அடையாளம் காட்டிய ஏழு பேர்களில் ஒருவரான இமானுவேல், "ஹேமந்த் எங்களிடம் இரண்டே முக்கால் லட்சம் வாங்கியிருக்கிறார். அதிலும் குறிப்பாக யாமினி என்கிற பெண்ணிடமும் பணம் வாங்கி ஏமாற்றியிருக்கிறார். ஹேமந்த்துக்கு எதிராகப் பேசிய ரோஹித் என்கிற நபரை லாரி ஏற்றி விபத்துக்குள்ளாக்கியிருக்கிறார். எங்களை மாஃபியா கும்பல் என சொல்லியிருக்கிறார்'' என ஹேமந்த்தின் குற்றச்சாட்டை மறுக்கிறார்.
சித்ரா மரணடைந்தபோதே அதற்கு ஹேமந்த்தான் காரணம் என நக்கீரனுக்கு பேட்டியளித்த சித்ராவின் நண்பரான ரேகா நாயர் என்கிற நடிகை, "சித்ராவின் மரணத்துக்கு நான்கு வி.ஐ.பி.க்கள்தான் காரணம். அது ஹேமந்த்துக்கு நன்றாகத் தெரியும்'' என்கிறார்.
இமானுவேலும் ரேகா நாயரும் சித்ராவின் அறையில் கஞ்சா நிரப்பப்பட்ட சிகரெட்டுகளும் சாராயப் பாட்டில்களும் ஆணுறைகளும் இருந்தன என்கிறார்கள்.
சித்ராவின் மரணத்தில் கஞ்சா நிரப்பப்பட்ட சிகரெட்டுகள் இருந்தன என்பதைப் பற்றி மட்டும் பதிவு செய்திருக்கின்றது போலீஸ். ஆனால் அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்த வி.ஐ.பி.க்கள் யார் என்பதைப் பற்றிய எந்தப் பதிவையும் போலீஸார் செய்யவில்லை.
அவர்கள் யார் என்பதை சித்ராவின் கணவர் இப்பொழுது சொல்லியிருக்கிறார். ஆனால் இது முடிந்துபோன வழக்கு. இதை மறுபடியும் கொடநாடு வழக்கு பாணியில் புலனாய்வு செய்யவேண்டுமா என்கிற உத்தரவுக்காக போலீசார் காத்திருக்கிறார்கள்.
ஹேமந்த் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என சித்ராவின் தாயார் பேட்டியளித்திருக்கிறார். சித்ராவின் தோழி ரேகா நாயரும் ஹேமந்த்தை பிராடு என்றே பதிவு செய்கிறார். ஆனால் எடப்பாடி ஆட்சியில் அமைச்சர்களின் பங்களாக்களில் குடி, கூத்து, பெண்கள் விநியோகம் தாராளமாக நடந்தது.
"ஹேமந்த் குற்றம்சாட்டும் ஒரு அமைச்சர், லீலா பேலஸ் ஓட்டலில் மட்டுமல்ல... கம்போடியா நாட்டிலும் காமக் களியாட்டம் நடத்தியவர்'' என்கிறார்கள், அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
சித்ராவின் மரணம் மறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் உண்மை வெளிவரும் என்கிறார்கள் விவரம் அறிந்த அ.தி.மு.க.வினர்.