நூற்றாண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இயங்கி வரும் நெல்லை இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (25/06/2020) தற்கொலை செய்து கொண்டார். கரோனா தொற்றின் தனிமையினாலே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றது மாவட்ட நிர்வாகம்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் கீழ ரத வீதியில் நூற்றாண்டுக்ளைக் கடந்து இயங்கி வருகின்றது உலகம் முழுவதும் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா. இனிப்பில் அல்வாவிற்கென்றே தனிப்பட்ட அடையாளமாய் மாறிய இருட்டுக்கடை அல்வாவின் உரிமையாளர் ஹரி சிங்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுநீரகத் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றிருந்த அவருக்கு, மருத்துவர் அறிவுரையின் பேரில் கோவிட்- 19 வைரஸ் தொற்று உள்ளதா..? என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முடிவில் அவருக்கும் அவரது மருமகன் கோபால் சிங் என்பவருக்கும் கரோனா வைரஸ் கோவிட் 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரும் பெருமாள்புரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையின் தனியறையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று (25/06/2020) தனியறையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் ஹரி சிங்கிற்கு சிகிச்சையளிப்பதற்காகச் செவிலியர்கள் தனியறைக்குச் சென்றிருந்த பொழுது அவர் அந்த அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. கரோனா வைரஸ் பாதித்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால் முறைப்படி காவல்துறைக்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இறந்தவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை கடையில் விற்பனையைக் கவனித்து வந்ததால் அதுகுறித்தும் காவல்துறையினரும், சுகாதாரத்துறையினரும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே தற்கொலை செய்து கொண்ட ஹரி சிங்கின் வீடு இருக்கும் திருநெல்வேலி டவுன் அம்மன் சன்னதி தெரு, அல்வாக்கடை உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினிகளைத் தெளித்து, தடுப்புகளை ஏற்படுத்தி அப்பகுதியினை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. பிரசித்திப் பெற்ற அல்வா கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருநெல்வேலி மக்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.