சிதம்பரம் மேல வீதியில் ஆறுமுக நாவலர் 144 வது குருபூஜை விழா அவர் தோற்றுவித்த சைவ பிரகாச வித்யாசாலையில் பஞ்சபுராண பாடல்களுடன் நடைபெற்றது. விழாவுக்கு ஆறுமுகநாவலர் பள்ளிக்குழு தலைவர் சேது சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சிதம்பரம ஷெம்போர்டு நிறுவனரும் பள்ளியின் முன்னாள் மாணவர் விஸ்வநாதன் மற்றும் பள்ளியின் செயலாளர் அருள்மொழிசெல்வன் பள்ளியின் செயல்பாடு மற்றும் ஒழுக்கம், மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள், இந்த பள்ளியில் பயின்று பல்வேறு உயர் பொறுப்புகளில் உள்ளவர்கள் குறித்து சிறப்புரையாற்றினார்கள். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ராம்குமார் அனைவரையும் வரவேற்றார்.
நக்கீரன் சிஎன்சி கைடு நடத்திய பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை ஊடகவியலாளர் அ. காளிதாஸ் வழங்கினார். மேலும் மாநில அளவில் ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் நடத்திய விண்வெளி ஆராய்ச்சி திட்ட மாதிரி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பள்ளிக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியினை தமிழ் ஆசிரியர் செல்வம் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள் மாணவ, மாணவிகள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக ஞானபிரகாசம் வடக்கு குளக்கரையில் அமைந்துள்ள சேக்கிழார் கோவிலில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முன்னாள் மாணவர்கள் மருத்துவர் நடராஜன், மரு.பத்மினி கபாலிமூர்த்தி முன்னிலையில் குருபூஜை நிகழ்வு துவங்கி, ஆறுமுக நாவலர் சிலையை, சிதம்பரம் நகரின் முக்கிய தெருக்கள் வழியாக மேல வீதியில் உள்ள ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளிக்கு ஆசிரியர்கள் மாணவர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.