கரூரில் போலீஸ் போன்று நடித்து பணம் கேட்டு தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட கும்பல். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கரூர் தாந்தோன்றிமலை குறிஞ்சி நகரைச் சேர்ந்த சுரேந்தர் என்பவரின் செல்போன் எண்ணுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்திருக்கிறார். அதில் அந்த மர்ம நபர், தான் சென்னை தாம்பரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் எஸ்ஐ ஆக பணியாற்றி வருவதாகவும், பெயர் முருகன் எனக் கூறியதுடன் உங்கள் செல்போனில் ஆபாச படம் எடுக்கும் வாட்ஸ் அப் குழுவில் இணைக்கப்பட்டு உள்ளது. நீங்கள் அந்தக் குழுவில் சேர்ந்தது பற்றி விசாரணை நடத்த வேண்டும். அதற்காக நீங்கள் சென்னைக்கு வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மேலும் இதிலிருந்து உங்களை விடுவிப்பதற்காக ரூ.5 ஆயிரத்தை கூகுள்-பே மூலமாக அனுப்ப வேண்டும், இல்லாவிட்டால் கைது செய்து விடுவோம் என மிரட்டியுள்ளார். குரல் பின்னணியில் வாக்கி டாக்கி ஒலி கேட்பது போல் செட் செய்திருந்ததால் பயந்து போன சுரேந்தர் கூகுள்-பே மூலம் ரூ.5 ஆயிரத்தை அந்த நபரின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார். ஆனால் மீண்டும் அந்த நபர் சுரேந்தரை பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து சுரேந்தர் கரூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து ஏடிஎஸ்பி கீதாஞ்சலி தலைமையில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது. போலீசாரின் தீவிர விசாரணையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த கௌதம், சந்தான சொர்ணகுமார், ஜான் பீட்டர், மாதவன் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் இவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.
சிறப்பாகச் செயல்பட்ட தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டு தெரிவித்தார். இதுபோன்று போனில் மிரட்டி பணம் கேட்பவர்கள் குறித்து பொதுமக்கள் காவல் நிலையத்திலோ அல்லது சைபர் கிரைம் எண்ணிலோ (1930) இணையதளத்திலோ உடனடியாக புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.