சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பிராங்கிளின். 27 வயதான இவர் அங்குள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, இவர் மீது சில குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜான் பிராங்கிளின் ஆழ்வார்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், அதில் கிடைக்கும் பணத்தை வைத்து, தனது கூட்டாளிகளுடன் ஊர் ஊராக சுற்றி வந்துள்ளார். இத்தகைய சூழலில், பிராங்கிளினுடன் சென்னையைச் சேர்ந்த ராகுல் மற்றும் அவரது நண்பர்களும் கஞ்சா விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பிராங்கிளின் மற்றும் ராகுலின் கும்பலுக்கும் இடையே கஞ்சா விற்பனை செய்வதில் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், சென்னையில் கஞ்சா விற்பது குறித்து ஏரியா பிரிப்பதில் இரு பிரிவினர்களுக்கு இடையே அடிக்கடி முட்டல், மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, பிராங்கிளின் தரப்பினருக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் பிராங்கிளின் தனது கூட்டாளிகளை அழைத்துக் கொண்டு ராகுல் மற்றும் அவரது நண்பர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், பிராங்கிளின் மீது ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர், அவரைப் பழிவாங்க வேண்டும் எனக் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது, இதைத் தெரிந்துகொண்ட பிராங்கிளின் சிறிதுகாலம் தலைமறைவாக இருக்க முடிவு செய்தார்.
அதன்படி, சென்னையில் இருந்து கிளம்பிய பிராங்கிளின் கடந்த ஒரு மாதமாக அரக்கோணத்தில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தார். ஆனால், பிராங்கிளினின் பகையாளிகளோ அவரைப் பல நாட்களாகத் தேடி வந்தனர். இத்தகைய சூழலில், பிராங்கிளின் அரக்கோணத்தில் உள்ள அவருடைய பெரியம்மா வீட்டில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், சென்னையைச் சேர்ந்த ராகுல், திவாகர் உள்ளிட்டோர் பிராங்கிளினைக் கொலை செய்ய முடிவு செய்தனர். மேலும், அரக்கோணத்தைச் சேர்ந்த தங்களுடைய கூட்டாளிகளின் உதவியுடன் பிராங்கிளினுக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி நள்ளிரவு 11 மணியளவில் பிராங்கிளின் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பிராங்கிளினைச் சுற்றி வளைத்துள்ளனர். ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிராங்கிளின் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார். ஆனால், அவரைக் கொல்ல வேண்டும் என துடித்த மர்ம கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். அந்த சமயம், அங்கிருந்தவர்கள் வாலிபர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் கிடப்பதாக அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அங்குவந்த போலீசார் பிராங்கிளினை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும், அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பிராங்கிளின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அரக்கோணம் நகரக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். அப்போது, போலீசாரின் தீவிர விசாரணையில் சென்னையைச் சேர்ந்த கும்பல்தான் இந்தக் கொலைக்கு முக்கிய காரணம் எனத் தெரியவந்தது. இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த ராகுல், திவாகர் அரக்கோணத்தைச் சேர்ந்த சத்யா, செல்வம் மற்றும் தர்மேஷ் உள்ளிட்ட 5 பேரை அதிரடியாகக் கைது செய்தனர்.
அதுமட்டுமின்றி, குற்றவாளிகளிடம் இருந்து கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் செல்போன்களைப் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஜான் பிராங்கிளினை முன் விரோதம் காரணமாகவும், கஞ்சா விற்பனையில் ஏரியா பிரிப்பதில் தகராறு ஏற்பட்டதாலும் அவரைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, அவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்தக் கொலையில் சம்மந்தப்பட்ட இரண்டு முக்கிய குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக ஒருமாத காலம் காத்திருந்து இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம், பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.