முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களில் முருகன் உள்ளிட்ட நான்கு பேர் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நான்கு பேரையும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த முருகன் அகதிகள் முகாமில் வைக்கப்பட்டுள்ளார். தன்னுடைய கணவரை அகதிகள் முகாமில் இருந்து விடுதலை செய்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு அவருடைய மனைவி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, லண்டனில் வசிக்கும் மகளுடன் சேர்ந்து வாழ கணவர் முருகன் விரும்புவதாகவும் அவருக்கு பாஸ்போர்ட் பெறுவது தொடர்பாக இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டி உள்ளதாகவும் நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அகதிகள் முகாமில் உள்ள அவரால் அங்கிருந்து வெளியே வர முடியவில்லை. அவரை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கில் மத்திய அரசின் அயல் நாட்டினர் பதிவு மண்டல அலுவலக அதிகாரி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், விதிகளின்படி இந்திய சிறையிலிருந்து விடுதலை ஆகும் வெளிநாட்டவர்களுக்கு பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், ஜெயக்குமார், சாந்தன், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட நான்கு பேரும் இலங்கைத் தமிழர்கள். பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால் கள்ளத்தோணி மூலம் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளனர். இதன் காரணமாகத் தற்போது அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்கள் கேட்டு கடந்த டிசம்பர் மாதம் இலங்கை தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் கிடைத்தவுடன் நான்கு பேரும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.