இந்திய ராணுவத்துக்கு சிப்பாய் கிரேட் பிரிவில் தொழில்நுட்பம், கால்நடை பராமரிப்பு, நர்சிங் உதவியாளர், எழுத்தர், ஸ்டோர் கீப்பர், வர்த்தகர் போன்ற பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வுக்கான விண்ணப்பங்கள் 2019ஆம் ஆண்டு இறுதி முதல் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பெறப்பட்டது. விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. கரோனா பரவலால் அந்தப் பணிக்கான தேர்வு நடைபெறவில்லை.
தற்போது, பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், சென்னை, திருவள்ளுவர், செங்கல்பட்டு என 10 மாவட்டங்கள், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மட்டும் கலந்துகொள்ள வேண்டும் என சென்னை பிரிவு இராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தினமும் 500 பேர் என்கிற விகிதத்தில் அவர்களுக்கு உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றனர். இங்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பின்னர் எழுத்து தேர்வு சென்னையில் நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி செய்தியாளர்களிடம், “25 ஆயிரம் பேருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் 80 சதவிதம் பேர் வந்து கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்வு முழுவதும் சரியான முறையில் நடைபெறுவதால் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். இடைத்தரகர்கள் யாராவது அணுகினால் அவர்கள் குறித்து தகவல் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.