தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள கீழக்கரந்தை கிராமத்தில் வேலுச்சாமி, கனக வேலம்மாள் தம்பதியருக்கு மணித்துரை என்கிற ஒரே மகன். அடிப்படையில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சொற்ப வருமானம் கொண்டவர்கள். குடும்பத்தில் யாரும் அரசு வேலையில் இல்லாதவர்கள். ஆனாலும் வீட்டில் ஒருவர் அரசுப் பணியில் இருக்கவேண்டும் என்கிற ஆர்வம் காரணமாக மணித்துரை தன் பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றவர் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்.
அவ்வப்போது விடுமுறையில் ஊர் வந்து செல்கிற மணித்துரைக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்புதான் உதயசுருதி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனாலும் தம்பதியருக்கு குழந்தை இல்லை. இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மணித்துரையின் தந்தை வேலுச்சாமி சாலை விபத்து ஒன்றில் உயிரிழக்க, குடும்பத்தில் தாங்க முடியாத சோகம். அந்த சம்பவம் நடந்த அடுத்த சில மாதங்களில் அடுத்த சோகம்.
ஜூலை 1 ஆம் தேதியன்று வழக்கம் போல் மணித்துரை ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது திடீரென துப்பாக்கியால் தனக்குத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். ராணுவ உயர் அதிகாரிகள் சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில் அண்மை நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வமாயிருந்த மணித்துரை அதில் அதிக அளவில் பணம் இழந்ததாகவும், கணக்கிலிருந்த தன் சம்பளப் பணம் 18 லட்சத்தையும் அதில் இழந்தது தாங்க முடியாத மன வேதனையில் நொறுங்கிப் போனவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
மணித்துரை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தை மட்டுமல்ல கிராமத்தையும் உறைய வைத்திருக்கிறது. இதில் இன்னொரு துயரம் என்னவெனில், மணித்துரை தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கீழக்கரந்தையிலிருக்கும் தன் தாய் கனகவேலம்மாளை தன் செல்லில் அழைத்திருக்கிறார். வழக்கமாகப் பேசுகிறவர் தானே எனத் தாயும் ஆவலுடன் பேச, மணித்துரையும் வீடியோ காலிலேயே தாயை அழைத்தவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக பணம் இழந்துவிட்டேன். இதற்காக சிலரிடம் பணம் வாங்கியுள்ளதாகவும், அத்தனையும் இழந்ததாகச் சொன்னவர், ஊருக்கு வர மனமில்லை. பணத்தை இழந்த நான் வாழ விரும்பவில்லை. இரண்டு துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் நான் இறந்துவிட்டதாக நினைத்துக்கொள். அதுவரை என்னோட பேசும்மா என்று சொன்னவர் செல்லில் பேசிக்கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சத்தம் இரண்டு முறை கேட்டதற்கு பின் மணித்துரை பேசவில்லை என்றதும் அவரது தாய் கதறித் துடித்திருக்கிறார். பேசிக்கொண்டிருந்தவன் தன் காதுபட சுட்டுத் தற்கொலை செய்துகொண்டது பெற்ற மனதை சுக்கு நூறாக்கியிருக்கிறது.
மணித்துரை தன் அக்கவுண்ட்டில் உள்ள சம்பளப் பணம் அத்தனையும் இழந்ததைத் தொடர்ந்து கடைசி வாய்ப்பாக தன் தாயிடம் இரண்டு லட்சம் வேண்டும், அவசர காரியம் என்று கேட்க, மறுவார்த்தை பேசாமல் அவரும் கேட்ட பணத்தை அனுப்பியிருக்கிறாராம். அத்தனையும் ஆன்லைன் ரம்மியில் அவர் இழந்தது தற்கொலைக்குப் பின்னர்தான் தெரிய வந்தது என்கிறார்கள். ஜூலை 3 ஆம் தேதியன்று ராணுவ வீரர் மணித்துரையின் உடல் அவரது சொந்த கிராமத்திற்குக் கொண்டு வரப்பட்டு கிராம மக்களின் கண்ணீர் அஞ்சலிக்குப் பின்னர் எரியூட்டப்பட்டிருக்கிறது. ஆன்லைன் ரம்மி அதிகாரப் பூர்வமாக தமிழகத்தில் தடை செய்யப்பட்டாலும் அது ராணுவ பகுதியிலும் தன் கொடூரத்தை வெளிப்படுத்தியிருப்பது கொடிய வேதனை என்கின்றனர்.