தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் போலீசார் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தப் போது நேற்று (14.07.2024) அதிகாலையில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இதற்கிடையே இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். அதோடு தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எதிர்க்கட்சியினர் எழுப்பினர்.
அதே சமயம் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து மனு அளிக்க நேரம் கேட்டுள்ளார். இதற்காக பகுஜன் கட்சி சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க ஆளுநர் ரவியிடம் மனு அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.